அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹூ!!!

Jan 26, 2011

நரகத்திற்கு செல்லும் வழி

அல்லாஹ்வின் வேதமான அல்-குர்ஆனுக்கும்,  நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழிகளுக்கும்  வேட்டு வைத்து விட்டு மார்க்கத்துக்கு முரண்பட்ட விசயங்களையும் விவகாரங்களையும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம்  வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.மூட நம்பிக்கைகளையும் அனாசாரங்களையும் அரங்கேற்றிவிட்டு அதற்கு இஸ்லாமிய முத்திரை குத்தி வழிபாடு செய்வதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.மக்கள் மத்தியில் மலிந்து போகியுள்ள ஷிர்க், பித்அத்களை கண்டித்து தூய்மையான குர்ஆன் மற்றும் ஹதிஸ்களை  போதிக்கின்ற போது பகிரங்கமாகவே மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள். சில ஆலிம்களும் உலமாக்களும் அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள்.

பரம்பரையாக செய்து வந்ததை உஸ்தாதுமார்கள் சொல்லி தந்ததை மூதாதையர்கள் காட்டி தந்ததை இன்று விட்டுவிடமுடியுமா என்று நியாயம் கேட்கிறார்கள். குர்ஆனில்  இருப்பதற்கு மாற்றமாக மூதாதையர் உஸ்தாதுமார்கள் சொன்ன செய்த காரியம் உள்ளதே என்று எடுத்துக்காட்டினாலும் கேட்கமாட்டேன் என்கிறார்கள்.

மார்க்கம் என்ற பெயரில் எந்தவொரு காரியத்தைச் செய்வதானாலும் அதற்கு ஆதாரம் காட்ட வேண்டும். குர்ஆனில் ஆதாரம் இருக்கிறதா? அல்லது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் (ஹதீஸ்களில்) ஆதாரம் இருக்கிறதா? என்று பார்த்துத் தான் பின்பற்ற வேண்டும். குர்ஆனிலும், ஹதீஸ்களிலும்  இல்லாத எந்தவொரு காரியத்தைப் பின்பற்றுவதானாலும் அதற்கு எந்த நன்மையும் கிடைக்காது. அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு சென்றுள்ளார்கள் என்று நாம் பிரசாரம் செய்கின்றபோது இந்த ஆலிம்களும் பாமர மக்களும் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா? ”எங்களது முன்னோர்கள் பெரியார்கள் உஸ்தாதுமார்கள் எல்லோரும் ஒரு காரியத்தை இஸ்லாத்தின் பெயரால் செய்திருக்கும் போது அது தப்பு என்று சொல்கிறீர்களா? என்று கேட்கிறார்கள்.


முன்மாதிரி

”அல்லாஹ்வின் தூதரிடத்தில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது” (33:21) என்று அல்லாஹ் கூறுகிறான். எந்தவொரு விசயத்தை செய்வதானாலும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையிலிருந்துதான் ஆதாரம் காட்ட வேண்டும். நபி (ஸல்) அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். நாங்கள் எதை பின்பற்ற வேண்டும் எப்படி பின்பற்ற வேண்டும்? எதை பின்பற்றக் கூடாது ஏன் பின்பற்றக் கூடாது என்பதையெல்லாம் நபி (ஸல்) அவர்கள் மூலம் காட்டித் தந்துள்ளான்.

எனவே ஒரு முஸ்லிமை பொறுத்தவரையில் செய்கின்ற காரியத்திற்கு நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களிருந்துதான் ஆதாரம் காட்ட வேண்டுமே தவிர மூதாதையர்களை பெரியார்களை உஸ்தாதுமார்களை ஆதாரம் காட்டக் கூடாது. இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் கூறவில்லை.மறுமையில் இவர்கள் உங்களுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்கள்.

ஒவ்வொரு சமுதாயமும் வழிகெட்டு போனதற்கு பிரதான காரணம் அந்தந்தச் சமுதாயம் நபிமார்களின் போதனைகளைச் செவிமடுக்காமல் மூதாதையர்களை பின்பற்றி வாழ்ந்ததுதான் காரணம் என்பதை அல்லாஹ் குர்ஆனில் தெளிவுபடுத்துகிறான்.

மூஸா நபி ஹாரூன் நபி தெளிவான சான்றுகளை அவர்களது சமுதாய மக்களிடம் கொண்டு வந்த போது அதனை மக்கள் நிராகரித்தனர். மூதாதையர்களை ஆதாரம் காட்டினர்.

”எங்கள் முன்னோர்கள் எதில் இருக்க கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்புவதற்காகவும் இப்பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் எங்களிடம் வந்திருக்கிறீர்களா? நாங்கள் உங்கள் இருவரையும் நம்பிக்கை கொள்பவர்களல்ல என்று கூறினார்கள். (10:78)

இப்றாஹீம் நபி தமது சமுதாய மக்களை சிலை வணக்கத்திலிருந்து தூரப்படுத்தி அல்லாஹ்வை மட்டும் வணங்கிட வேண்டும் என்ற பிரசாரம் செய்த போது அதனை ஏற்றுக் கொள்ள மக்கள் மறுத்தனர். மூதாதையர்களை ஆதாரம் காட்டினர்.

”நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன? என்று அவர் (இப்றாஹீம்) தமது தந்தையிடமும் தமது சமுதாயத்திடமும் கேட்ட போது ‘எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம் என்று அவர்கள் கூறினர்.

நீங்களும் உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று அவர் கூறினார். (21:52-54)

இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்கள் என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை.

உங்கள் முன்னோர்களை எதில் கண்டீர்களோ அதைவிட நேர்வழியை நான் கொண்டு வந்தாலுமா? எனக் கேட்பீராக எதனுடன் நீங்கள் அனுப்பப் பட்டீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்களே என்று அவர்கள் கூறினர். (43:23-24)

மூதாதையர்கள் மேல் வைத்திருந்த பக்தியின் காரணமாக அல்லாஹ்வுடைய கட்டளையை மீறி நபிமார்களின் போதனைகளை அந்த மக்கள் துச்சமாக கருதினார்கள். சத்தியத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களும் தமது சமுதாய மக்களிடம் குர்ஆனைப் பின்பற்றுங்கள் என்னை நபியாக ஏற்றுப் பின்பற்றுங்கள் என்று கூறியபோது அந்த மக்களும் நிராகரித்தனர்.

”அல்லாஹ் அருளியதை (குர்ஆனை) நோக்கி வாருங்கள். இத்தூதரை (முஹம்மது நபியை) நோக்கி வாருங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும் என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும் நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவீர்கள்?) (5:104)

அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும் போது எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்று கூறுகின்றனர். ஷைத்தான் நரகத்தின் வேதனையை நோக்கி அவர்களை அழைத்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவீர்கள்?) (31:21)

மூதாதையர்கள் பெரியார்கள் நேர்வழியின் பால் போனார்களா? வெற்றி அடைந்தார்களா என்பதை யாராலும் கூறமுடியாது என்பதை அல்லாஹ் இவ்வசனங்கள் மூலம் அறிவூட்டுகிறான்.

குர்ஆனைப் பின்பற்றுங்கள் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள் என்று மக்களிடம் கூறும்போது அன்றைக்கு நிராகரித்த மக்கள் எதனை கூறினார்களோ அதனையே இன்றைய முஸ்லிம்களும் கூறுகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறான போக்கு என்பதை சிந்திக்க வேண்டும்.


மூதாதையர்களுக்காக நாம் துஆ செய்வோம்


அவர்களின் முடிவை அல்லாஹ்விடம் விடுவோம். அவர்களுகளுடைய விசயங்களில் எல்லை மீறுவதை விட்டும் தவிர்ந்து கொள்வோம். அவர்களை மதிப்பது என்பது  வேறு. பின்பற்றுவது என்பது வேறு. அவரும் ஒரு சாதாரண மனிதர் தான்.அவர்களை அல்லாஹ்வே அறிவான். என்று நல்லெண்ணம் வைப்போம்.அவர்களுடைய முடிவைபற்றி தர்க்கம் புரிவதை விட்டும் தவிர்ந்து கொள்வோம்.
மார்க்கம் மூதாதயர்களுடையதல்ல அல்லாஹ்வுடையது என்பதை ஆழமாக புரிந்து செயற்படுவோம்.
இல்லை! இல்லை! எங்கள் முதாதையர்கள், பெரியார்கள், உஸ்தாதுமார்களின் வழிமுறைகளை விட்டுவிட மாட்டோம் என அடம்பிடித்தால் பின்வரும் வசனங்களை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கட்டும்.
 

நரகத்தில் அவர்கள்
”அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும்  நாளில் ‘நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதர் (முஹம்மது நபி)க்கு கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? எனக் கூறுவார்கள்.

எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர் எனவும் கூறுவார்கள்.

எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையை அளிப்பாயாக அவர்களை மிகப் பெரிய அளவுக்கு சபிப்பாயாக எனவும் கூறுவார்கள். (33:66-68)

நரகத்தில் வேதனையை அனுபவிக்கின்ற போதுதான் மூதாதையர்களை பெரியார்களை பின்பற்றியது தப்பு. அவர்கள் மீது பக்தி கொண்டு அவர்கள் பின்னால் சென்றது தப்பு என்று அபாயக் குரல் எழுப்புகின்றனர். அவர்களும் வழிகெட்டு எங்களையும் வழிகெடுத்து நாசமாக்கிவிட்டார்களே.

இந்த அவல நிலையிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி மார்க்க விசயத்தில் மூதாதையர்களைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு அல்குர்ஆனையும் நபிவழியையும் ஆதாரமாகக் கொண்டு பின்பற்றுவதுதான்! நரகத்திலிருந்து தப்பிக்கும் ஒரே வழியாகும்.



மேலும் அறிய

No comments:

Post a Comment