அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹூ!!!

Apr 3, 2011

இஸ்லாம் கூறும் அரசியல்

இன்றய உயர் அரசியல் அதிகாரம் தமிழர் கையிலா? அல்லது முஸ்லிம்கள் கையிலா? என்ற போட்டி நடக்கின்ற ஒரு சூழ்நிலையிலும் ஒரு கட்சி பிறிதொரு கட்சிக்கெதிராய் வாக்களித்து அதற்கு சாவுமணி அடிக்குமாறு வேண்டி சமுதாயத்தில் தாண்டவமாடும் சூழ்நிலையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
 
இவ்வாறான சூழ்நிலையில் இஸ்லாம் எவ்வாறான அரசியலை வலியுறுத்துகின்றது என்பதையும் அதற்குண்டான இறைவசனங்களையும் ஒரு முஸ்லிம் தன் உள்ளத்தினுள்ளே எவ்வாறு வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் சற்று தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர்களே!
பொதுவாக இஸ்லாமிய வரலாற்றில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் 13 வருட காலம் தன்னிகரற்ற ஒரு ஆட்சியை நிறுவிவிட்டுச் சென்றுள்ளார்கள் என்கின்ற வரலாற்றினை நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.
அந்த ஆட்சியில் அநியாயம் கிடையாது, வாக்களித்தால் அதற்கு மாறு செய்வது கிடையாது,
தப்பு செய்தவர்களை தனது மகளாக இருந்தாலும் தண்டிப்பதில் பாரபட்சம் கிடையாது, தானே அனைத்தும் செய்பவன் என்ற மமதை கிடையாது, பிற மதத்தவரை இழிவுபடுத்தும் குறுகிய மனம் கிடையாது இதனால் தனக்குப்பின்னுள்ள ஒட்டு மொத்த சமுதாயத்திற்கு ஒரு சிறந்ததொரு ஆட்சியை வழிகாட்டி விட்டு மறைந்து சென்றார்கள் அண்ணலார் (ஸல்) அவர்கள்.

ஆனால் இன்றய அரசியல்வாதிகள் எவரிடமும் இக்குணங்கள் முழுமையாக இடம்பெற்றிருக்கின்றனவா? இன்று இதனைச்செய்வேன் என்று சமுதாயத்தின் மத்தியில் சத்தியப்பிரமாணம் செய்வான் நாளை அதனை மீறி அதற்கெதிரான‌ சதி முயற்சிகளில் ஈடுபடுவான். இவ்வாறான இழிந்த நிலைக்கு இந்த சமுதாயத்தின் தலைவிதி தலை கீழாய்
மாறிப் போயிருக்கின்றது. இஸ்லாத்திற்காய் வாழ்ந்து இஸ்லாத்திற்காய் இன்னுயிரை நீத்த இஸ்லாமிய அறிஞர் இமாம் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா(ரஹ்) என்ற ஒரு அறிஞர் (மார்க்க அரசியல்) என்ற நூலில் இஸ்லாமிய அரசியல்வாதிகளிடம் இருக்க வேண்டிய பண்புகளை இரண்டாகப்
பிரித்துள்ளார்.

1)பலம்
2)நம்பிக்கை

பலம்

ஒரு முஸ்லிம் ஆட்சியை நிறுவுவதென்றால் அதற்குரியஅனைத்து சக்திகளையும் அவன் உள்வாங்கியிருக்க வேண்டும்
1-தப்பு செய்தவர்களை தண்டித்தல்
2-இஸ்லாமிய உம்மாவுக்கெதிரான போராட்டங்களை தடுத்து நிறுத்துதல்
3-பிற சமுகங்களுக்கிடையிலான நல்லிணக்கங்களை உருவாக்கல்;
5-அறிவு பலம் மேலோங்கிக் காணப்படல்
போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.

நபி தாவுத்(அலை) அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கிய இறைவன்   குறிப்பிடுகின்றான் அதாவது அவருக்கு (இறைவன்) உடல், கல்வி ஆகியவற்றின் பலத்தையும் அதிகரித்தான் இதிலிருந்து ஒரு ஆட்சியாளனுக்கு உடல் பலமும் அறிவுப் பலமும் இன்றியமையாதது என்பது இங்கனம் தெளிவாகின்றது

நம்பிக்கை:

இதில்தான் அதிகமான ஆட்சியாளர்கள் தங்களை மறந்து விடுகின்றனர்.  ஒட்டுமொத்த சமுதாயமும் இவன் பதவிக்கு வந்தால் தனக்கு இது கிடைக்கும் அது கிடைக்கும் என்ற அவாவில் காத்து நிற்கும், ஆனால் இவனோ அதற்குப் பூச்சாண்டி காட்டி பொய்யான காரணங்களைச்சொல்லி, சமுதாயத்திற்கு வழங்கப்பட்டதையும் தான் சுருட்டிக்கொண்டு நழுவி விடுவான். அங்கு ஏமாற்றப்படுவது சமுதாயம்தான்! ஏமாறுபவன் இருக்கும் காலமெல்லாம் ஏமாற்றுபவன் இருந்து கொண்டே இருப்பான் என்பது உலக நியதி அல்லவா? எனவே சமுதாயம் இதில் விழிப்புப் பெற வேண்டும். குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடும் போது
அல்லாஹ் அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்குமாறும் மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அவன் கட்டளையிடுகிறான்‘  (அந்நிஸா:58)
ஏனெனில் தலைமைத்துவம் என்பது ஒரு அமானிதம் அதனை மீறினால் இறைவனின் தண்டனைக்கு உள்ளாக வேண்டி வரும் என்பதனை நாம் யாருமே மறந்து விட முடியாது. அபுதர் (ரலி) அவர்களுக்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தலைமைத்துவம் சம்பந்தமாகக் குறிப்பிடும் போது

அது ஒரு அமானிதம் அது மறுமை நாளையில் கைசேதமும் கவலையும் ஆகும் அதனை (தலைமைத்துவத்தை) அதன் உரிமையுடன் எடுத்து தன் மீதுள்ள (பொறுப்புக்களையும்) நிறைவேற்றியவனைத் தவிரஎன நபி (ஸல்) அவர்கள் இயம்பினார்கள். 
(ஸஹீஹ் முஸ்லிம்)

எனவே இந்த சமுதாயத்தின் அரசியல்வாதிகள் இந்த இரண்டு அடிப்படைகளிலும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்பதை இங்கனம் வேண்டிக் கொள்கிறோம்
சட்டம் என்று வந்து விட்டால் அதில் தயவு தாட்சயம் எவருக்கும் காட்டக் கூடாது இறைவனுக்கு மாத்திரம் அஞ்சுகின்ற மனோ நிலையை நாம் குறிப்பாக அரசியல்வாதிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எனவே இவ்வாறான குணங்கள் அரசியல்வாதிகளிடம் அமைவதோடு ஹனபி ஹனபியாகவோ அல்லது ஷாபி ஷாபி யாகவோ இருக்க இஸ்லாமிய ஆட்சியை அமைப்போம் என்று கூக்குரலிடாமல் முதலில் இறைவனைப் பற்றிய அச்சம்ந‌பிவழிகளை உடனுக்குடன் அமுல் படுத்தும் தயாள உள்ளம் ஷிர்க்பித்அத்தினை எதிர்க்கும் மனோ தைரியம் சத்தியமென்றால் அனைத்தையும் உடைத்துச் சொல்லும் தீவிர மனப்பாங்கையும் எம்முள் உருவாக்கி இஸ்லாமிய நெஞ்சங்களில் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் பாலிப்பானாக.

No comments:

Post a Comment